வறுமையை ஒழிக்கும் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் செயற்திட்டம் ஜனவரி முதல் ஆரம்பம்- ஜனாதிபதி

வறுமையை இல்லாதொழிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் செயற்திட்டம் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பம்.

இதுதொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக குறிப்பு பின்வருமாறு:

  • குறைந்த வருமானம் பெறுபவர்களை உயர் வருமானம் பெறுபவர்களாக மாற்றுவது அடிப்படை நோக்கமாகும்….
  • குறைந்த கல்வித் தகைமைகள் கொண்ட தொழில் நிபுணத்துவமற்ற ஏழை மக்களுக்கும் தொழிற் தகுதிகளை பெற்றுக்கொடுத்தல்….
  • தாம் வசிக்கும் பிரதேசத்திலேயே வேலை வாய்ப்பு….
  • மாதாந்தம் 35,000 ரூபா சம்பளம்….

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய பல்நோக்கு அபிவிருத்தி செயலணியொன்றினை அமைப்பதற்கான முதலாவது கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் (18) முற்பகல் இடம்பெற்றது.

மிகவும் வறிய மட்டத்தில் வாழ்ந்துவரும் சமூர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்ற ஆயினும் அது கிடைக்கப்பெறாத குடும்பங்களை கட்டியெழுப்புதல் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் குறிக்கோளாகும்.

இத்திட்டத்தினூடாக அத்தகைய குடும்பங்களில் தொழிற்துறைக்கு பங்களிப்பு வழங்கக்கூடியவர்களை அவர்களுக்குப் பொருத்தமான துறைகளில் பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படும்.

எவ்வித கல்வியையும் பெறாத அல்லது குறைந்த கல்வித் தகைமைகளைக் கொண்ட பயிற்றப்படாதவர்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் முதலாம் கட்டமாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களை வழிநடத்துவதற்கும் முகாமைத்துவம் செய்வதற்கும் மேலும் 30,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சுமார் 10,000 பட்டதாரிகளுக்கு முகாமைத்துவ மற்றும் வெளிக்கள அலுவலர் மட்டத்தில் மேற்பார்வை செய்வதற்கான வேலைவாய்ப்புகளும் இதனூடாக உருவாக்கப்படும்.

சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் 300 – 350 பேரளவில் இதற்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அவர்கள் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வேறு அரச நிறுவனங்களில் உள்ள கல்வித் தகைமைகள் தேவைப்படாத வெற்றிடங்களுக்காக உள்ளீர்க்கப்படுவர். தச்சுத்தொழில், விவசாயம், மீன்பிடி, வனப்பாதுகாப்பு போன்ற துறைகளுக்காக அந்த அந்த பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயற்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சினதும் முப்படையினரினதும் மேற்பார்வையில் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்குதல் இடம்பெறும்.

இந்த வேலைத்திட்டம் தனது தேர்தல் செயற்பாடுகளின்போது உருவான திட்டமாகுமென்பதை இதன்போது சுட்டிக்காட்டிய மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், வினைத்திறனான முறையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். இத்திட்டத்தினூடாக வறிய குடும்பங்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டு பொருளாதார ரீதியில் வலுவடைவார்கள் எனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அவர்களின் இந்த எண்ணக்கருவினூடாக வருடாந்தம் விவசாய உற்பத்திப் பொருட்களின் இறக்குமதிக்காக செலவிடப்படும் 2000 மில்லியன் ரூபாவினை வெகுவாகக் குறைக்க முடியுமென ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர இதன்போது சுட்டிக்காட்டினார்.

பொதுச் சொத்துக்களை பராமரித்தல், சிவில் செயற்பாடுகளின்போது அரச பிரதிநிதிகளுக்கு உதவியளித்தல், டெங்கு உள்ளிட்ட நோய் நிவாரண செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்குதல், இயற்கை அனர்த்தங்களின்போது உதவியளித்தல், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கரையோர பாதுகாப்பிற்கு உதவியளித்தல் போன்ற துறைகளுக்கும் இந்த செயலணி ஒத்துழைப்பு வழங்கும்.

இவர்களது ஆற்றல்கள் மற்றும் திறமைகளுக்கமைய வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கும் அத்திட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்படுகின்றது. 10 வருட கால சேவையினை பூர்த்தி செய்ததன்பின்னர் ஓய்வூதியத் திட்டத்திலும் இவர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

கல்வித்தகைமை தேவையற்ற தொழில்களுக்காக கல்விகற்றவர்களை இணைத்துக்கொள்ளப்படும் நீண்டகால அரசியல்மயமாக்கப்பட்ட தவறினை திருத்தி பாதிக்கப்பட்ட துறைகளை ஒழுங்குபடுத்துவதற்கு இதனூடாக வாய்ப்புக்கிடைக்குமென ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க சுட்டிக்காட்டினார். இந்த செயலணியில் சரியான நபர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டியதுடன், அவர்களுக்கு தமது பிரதேசத்திலேயே வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுத்தல் அத்தியாவசியமாகுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ரூபா 3,500 சமூர்த்தி கொடுப்பனவாக கிடைக்கப்பெற்ற குடும்பங்களுக்கு 35,000 ரூபா வரை வருமானம் கிடைப்பதற்கு இதனூடாக வாய்ப்பு கிடைக்கின்றது. இத்திட்டம் நாட்டில் மக்களது உள்ளார்ந்த மாற்றத்திற்கு வழிவகுக்குமெனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இந்த திட்டம் வறிய குடும்பங்களுக்கு மாத்திரமாவது என்பதனால், அவர்களின் வீடுகளுக்கு சென்று உண்மை நிலையறிந்து, பொருத்தமானவர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார். ஆட்சேர்ப்புத் திட்டங்களில் இதுவரை இடம்பெற்று வந்த தவறுகள் மீண்டும் இடம்பெறுவதற்கு இடமளிக்க வேண்டாமெனவும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

அமைச்சர்களான பவித்ரா வன்னியராச்சி, செஹான் சேமசிங்க, தாரக பாலசூரிய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, பீ.பி.சானக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான காஞ்சன ஜயரத்ன, ஜகத் குமார, டபிள்யு.டி.வீரசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி ஊடப் பிரிவு