ஹட்டனில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி 3 வருடங்களாக பயணித்த ரயில் ஒன்றை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில் சாரதிகள் இருவர் மற்றும் ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேர் ஓய்வு பெறுவதற்காக பயணித்த ரயிலே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சர் அண்மையில் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தினமும் கொழும்பிலிருந்து பிற்பகல் 12.15 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் ரயில் கண்டி நோக்கி பயணிக்கும், பின்னர் கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும். அதற்கமைய தினமும் இரவு 8.30 மணியளவில் ஹட்டன் ரயில் நிலையத்தை நெருங்கும் இந்த ரயிலின் சில பெட்டிகள் நீக்கப்படும்.

ஹட்டன் ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு என்ஜின் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிக்கும் ரயில் பெட்டியை பொருத்தி 50 கிலோ மீறறர் தூரம் எந்த பயணிகளுமின்றி பயணிப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய அந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
