தங்கள் குழந்தை வேறொருவருக்கு பிறந்துள்ளதை அறிந்து அதிர்ந்த தம்பதி: உணர்ச்சி மயமான ஒரு வழக்கு!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதியினர், செயற்கை கருவூட்டல் முறையில் உருவான தங்கள் குழந்தை கொரிய அமெரிக்க பெண் ஒருவருக்கு பிறந்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்சைச் சேர்ந்த Anni மற்றும் Ashot Manukyan தம்பதியினர் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், Anniயின் கருப்பையில் வைக்கப்பட்ட கரு குழந்தையாக வளரவில்லை.

ஏமாற்றத்தில் சோர்ந்துபோய் மன நல ஆலோசனை மையங்களுக்கு சென்று கொண்டிருந்தபோது, ஒரு நாள், அவர்களது மருத்துவமனையிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.

தம்பதி என்னவென்று விசாரிக்க, நியூயார்க்கில் உள்ள ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவர்கள் கொரிய அமெரிக்க பெண்ணாக இருக்க, அவருக்கு வெள்ளையின குழந்தைகள் பிறந்துள்ளதால், ஒருவேளை அந்த குழந்தைகள் Anni மற்றும் Ashot Manukyan தம்பதியினருடையதாக இருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும், அதனால் தம்பதியின் DNA வேண்டும் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அது தங்கள் குழந்தைதான் என்று கூறி, தங்கள் குழந்தையை தரும்படி Anni மற்றும் Ashot கேட்க, அந்த கொரிய அமெரிக்க பெண், தான் தான் அந்த குழந்தையை சுமந்து பெற்றதாகவும், ஆறு வாரங்கள் வரை பாலூட்டி வளர்த்ததாகவும் கூறி, குழந்தையை கொடுக்க மறுத்துவிட, தம்பதி நீதிமன்றம் செல்லவேண்டியதாயிற்று.

பின்னர் குழந்தை Anni மற்றும் Ashot Manukyan தம்பதியினருடையதுதான் என DNA பரிசோதனையில் முடிவாக, ஒரே நாளில் ஒரு பெண்ணிடமிருந்து அவர் பெற்ற குழந்தையை பிரிக்க முடியாது என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக, பெற்றோர் Alec என பெயரிடப்பட்ட தங்கள் குழந்தையிடம் பழகி, பின்னர் கடைசியாக குழந்தை அதன் உண்மையான் பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கொரிய அமெரிக்கப் பெண்ணுக்கு பிறந்த மற்றொரு குழந்தையும் வேறொருவருடையது என்று தெரியவர, அந்த குழந்தையும் அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட, கடும் ஏமாற்றமடைந்துள்ளார் அந்த பெண்.

இந்நிலையில் தங்களை இவ்வளவு மன வேதனைக்குள்ளாக்கி நீதிமன்றம் ஏற வைத்த மருத்துவமனை மீது இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்கள் Anni மற்றும் Ashot தம்பதி.

தற்போது அந்த மருத்துவமனை ஒரு குறிப்பிட்ட தொகையுடன் சமரசம் செய்ய முன் வந்துள்ளது. அது எவ்வளவு, என்ன சமரசம் என்பது குறித்த விவரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.