யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

பானிப்பூரி விற்று தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்து வந்த இளம் கிரிக்கெட் வீரர் ஐபிஎல் ஏலம் மூலம் கோடீஸ்வரனாகியுள்ளார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (17) இவருக்கு கிரிக்கெட் மீது இருந்த காதலால் தனது 11 வயதில் தந்தையுடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார்.

மும்பையில் கிரிக்கெட் பயிற்சி பெற விரும்பினார் அவர். அதற்காக தந்தையுடன் மும்பை வந்தார். ஆனால், தெரியாத ஊரில் அடுத்த வேளை உணவுக்கே கஷ்டம் என்ற நிலையில், அவரது தந்தை சில நாட்களில் உத்தரபிரதேசத்திற்கு திரும்பினார்.

ஆனால், கிரிக்கெட் மீது இருந்த காதலை விட தயாராக இல்லாத ஜெய்ஸ்வால், மும்பையிலேயே தனியாக இருந்தார். தங்க இடம் இல்லை, அடுத்த வேளை உணவுக்கு வழியில்லை என்ற நிலையில் பானி பூரி கடையில் மாலை நேரத்தில் வேலைக்கு சேர்ந்த அவர், பகலில் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார்.

பயிற்சியாளர் ஒருவர் ஒரு உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடினால் ஒரு கூடாரம் ஏற்பாடு செய்து தருவதாகக் கூற, அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி தனக்கு தங்க ஒரு கூடாரத்தை ஏற்படுத்திக் கொண்டார் ஜெய்ஸ்வால்.

அவரது விளையாட்டைக் கண்டு சிலர் அவருக்கு பொருள் உதவி செய்ய, வேகமாக வளர்ந்த ஜெய்ஸ்வால் சில வாரங்கள் முன்பு நடந்த விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதம் அடித்து தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றார்.

அதை தொடர்ந்து இந்தியா under 19 அணியில் இடம் பெற்றார். இந்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 2.40 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் ஜெய்ஸ்வால்.

இது அவரின் வாழ்க்கையிக் மிகப் பெரிய திருப்புமுனையாக மாறி உள்ளது. ஐபிஎல் தொடரில் அவர் சாதிக்கும் பட்சத்தில் கிரிக்கெட்டில் பல்வேறு உயரங்களை தொடருவார் என்பதில் சந்தேகமில்லை.
