அமெரிக்காவின் தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக தமிழரை நியமித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

சேதுராமன் பஞ்சநாதன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக கணனி விஞ்ஞானியும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் பிரதித் தலைவருமான சேதுராமன் பஞ்சநாதனை நியமித்துள்ளார்.

அமெரிக்க தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக வானியல் விஞ்ஞானியான France Córdova கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருவதுடன் அவரது பதவிக்காலம் 2020ஆம் ஆண்டுடன் முடிய உள்ளதை அடுத்தே பஞ்சாநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி பஞ்சநாதனின் அர்ப்பணிப்பு, படைப்பாற்றல், ஆழமான நுண்ணறிவு என்பன தேசிய அறிவியல் நிதியத்தின் தொடர் ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளை வழிகாட்ட உதவும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விஞ்ஞானம் ஆலோசகரும், வெள்ளை மாளிகையின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பட கொள்கை அலுவலகத்தின் தலைவருமான Kelvin Droegemeier வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பஞ்ச் என்று அழைக்கப்படும் பஞ்சநாதன் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் நிதியத்தில் சபையில் கடமையாற்றி வந்துள்ளார். அத்துடன் அரிசோனா மாநில பல்கலைக்கழத்தில் ஆராய்ந்து மற்றும் கண்டுபிடிப்புகள் துறை உட்பட பல துறைகளில் தலைமை பதவிகளை வகித்துள்ளார்.

கலாநிதி சேதுராமன் பஞ்சநாதன் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதுடன் சென்னை பல்கலைக்கழகத்துடன் விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

இதன்பின்னர், பெங்களூர் இந்திய அறிவியல் கழகம் மற்றும் சென்னை தொழிற்நுட்ப அறிவியல் பிரிவில் உயர் கல்வி பயின்றுள்ளார். அத்துடன் கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் மற்றும் கணனி பொறியியலில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.