ஒரே மேடையில் 271 திருமணம்: பின்னணியில் நெஞ்சை உலுக்கும் காரணம்!

271 திருமணம்

இந்திய மாநிலம் குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் ஒரே மேடையில் 271 ஏழை இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளார். குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த வைர வியாபாரி மகேஷ் சவானி. இவரே சூரத்தில் டிசம்பர் 22 ஆம் திகதி இந்த கூட்டு திருமண விழாவை முன்னெடுக்க உள்ளார்.

271 மணப்பெண்களில் 5 பேர் இஸ்லாமியர்கள் எனவும் அதில் ஒருவர் நேபாளம் நாட்டவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தெரிவான 271 மணப்பெண்களில் இரண்டு பெண்கள் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐந்து பேர் மற்றும் ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த தலா ஒருவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதன் முறையாக 23 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் மகேஷ் சவானி. தந்தையை இழந்த இளம்பெண்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பை இவர் வழங்கி வருகிறார். தொடர்ந்து 8-வது ஆண்டாக மகேஷ் சவானி இதை முன்னெடுத்து வருகிரார்.

2008 ஆம் ஆண்டு தமது தூரத்து உறவினர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக நிதி திரட்டி வந்த நிலையில், அது குறிப்பிட்ட நாளில் முடியாமல் போகவே, குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த தகவல் தெரியவந்த மகேஷ் சவானி உடனடியாக குறித்த இளம்பெண்ணின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

அதன் பிறகு, சூரத் பகுதியில் தந்தையை இழந்த திருமணம் செய்துகொள்ளும் வசதி இல்லாத இளம்பெண்களை தெரிவு செய்து ஒரே மேடையில் தமது செலவில் திருமணத்தை முன்னெடுத்து வருகிறார்.

இதுவரை மகேஷ் சவானியால் 3,172 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் சூரத் நகரில் குறித்த திருமண விழா நடைபெற உள்ளது.