அன்று சாப்பாட்டுக்கே கஷ்டம்!… இன்று லட்சக்கணக்கில் வருமானம்- சமையலில் அசத்தும் உன்னி

உன்னி

எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் ஜொலிக்கும் அளவுக்கு, யூடியூப்பில் கற்றுத் தெரிந்து கொள்பவர்களும் அதிகம். அந்தவகையில் யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றி அதன்மூலம் சம்பாதிக்கும் நபர்களும் அதிகம்.

இதிலும் குறிப்பாக உணவு தொடர்பான வீடியோக்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கத்தான் செய்யும். பலரும் தங்களுக்கே உரித்தான ஸ்டைலில் வீடியோக்களை பதிவேற்றினாலும், கேரளாவை சேர்ந்த உன்னிக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

காரணம் இயல்பான வீடியோக்களை அழகான இயற்கையுடன் படம்பிடிப்பதே. கேரளாவின் கும்பலங்கி தீவை சேர்ந்த உன்னி ஜார்ஜ்ஜின் யூடியூப்பின் சேனல் ”OMKV Fishing and Cooking”.

கொச்சியின் உப்பங்கழிகள், கடலோரப் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவரே மீன்பிடித்து சமையல் செய்து அசத்துகிறார்.

கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த உன்னிக்கு, 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது, அடுத்தாண்டே குழந்தையும் பிறக்க வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் புயலால் வந்தது அந்த விடயம்.

உடல் எடையும் அதிகரித்து பார்வை மங்க, மருத்துவ பரிசோதனை செய்த உன்னிக்கு அதிர்ச்சி காத்திருந்தது, இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாம்.

அந்நேரத்தில் மனைவியும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார், தொடர்ந்து சொந்த பந்தங்கள் முயற்சியில் கேரளா மக்கள் உதவிக்கரம் நீட்ட 2017ம் ஆண்டு உன்னிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

அடுத்ததாக வருமானத்திற்கு என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு தோன்றிய யோசனை தான் “யூடியூப் வழி சமையல்”. இவரது நண்பரும் எடிட்டிங் துறையில் பணிபுரிய தனக்கான வாய்ப்பை சரியான பயன்படுத்திக் கொண்டார் உன்னி.

சேனல் தொடங்கிய சில மாதங்களிலேயே சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது, இதன்மூலம் தற்போதைய நிலவரப்படி மாதந்தோறும் ரூ.30,000 வருமானமாக ஈட்டுகிறாராம்.

இவரது கதையை கேட்ட பலரும் உதவ முன்வந்தாலும் தன்னுடைய சொந்த காலில் நின்று சம்பாதித்து வருவதால் உதவிகளை மறுத்துவருகிறாராம் உன்னி.

இதுமட்டுமா தன்னுடைய சிகிச்சைக்காக தான்பெற்ற கடனையும் முழுமையாக அடைத்துவிட்டதால் குழந்தைகளுடன் மனமகிழ்ச்சியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் உன்னி.