Airport

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளினால் ஏற்படும் நெரிசல்களை குறைப்பதற்காக விமான நிலைய விமான சேவை நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய இதுவரையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் விமான பயணிகளுக்காக விசா கவுண்டர்கள் 19 உள்ள நிலையில் உள்நுழையும் பகுதியில் 25 கவுண்டர்களும் உள்ளன.
எனினும் தற்போது அவை போதுமானதாக இல்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.

அதற்கமைய அந்த கவுண்டர்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக இந்த அனைத்து கவுண்டர்களுக்காகவும் குடிவரவு குடியல்வு அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசா தொடர்பில் பயணிகளுக்கு எவ்வித சிக்கல் ஏற்பட்டாலும் அந்த சந்தர்ப்பத்திலேயே அதற்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

அத்துடன் கர்ப்பிணி பெண்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்காக தனியாக விசா கவுண்டர் ஒன்றை ஒதுக்குவது தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளுக்காக வழிக்காட்டல்களும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் நாட்டில் இருந்து வெளியேறும் வரையிலும், வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வரையிலும் அவர்களுக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
