சூரியகிரகணம்

இலங்கையில் சூரிய கிரகணமானது நாளைய தினம் இலங்கை நேரப்படி காலை 8.09 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 வரை அதாவது 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடிக்கவுள்ளது.
அதிலும் 3 நிமிடங்களும் 8 வினாடிகளும் (09:35-09:38) மோதிர வடிவிலான கங்கண சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) தென்படவுள்ளது.

இந்த சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞானப் பல்கலைக்கழகம், இலங்கையின் தொழிநுட்பவியல் மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அருகிலுள்ள மைதானத்திலும், கிளிநொச்சியிலுள்ள பொறியில் பீட நிர்வாக கட்டடத்திற்கு முன்பாகவும் இதற்கான ஏற்பாடுகளை யாழ். பல்கலைக்கழகம் செய்துள்ளது.

இவ்வரிய நிகழ்வினை அவதானிப்பதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு கிரகண அவதானிப்பாளர்களும் விஞ்ஞானிகளும் ஆர்வம் கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த வண்ணமுள்ளனர்.

ஏற்கனவே நூற்றுக்கணக்கானோர் வருகை தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் நிமித்தம் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் உயர் ரக தொலைநோக்கு காட்டிகளுடன் கூடிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடெங்கிலுமுள்ள பாடசாலைகளில் எட்டாம் தரம் முதல் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சூரியகிரகணம் தொடர்பாக நடைபெற்ற தெரிவுப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

இச்சூரியகிரகணத்தை இம்முகாமிற்கு வருகைதரும் ஆறாயிரத்திற்க்கு மேற்பட்ட பொதுமக்கள் இதனை பாதுகாப்பான முறையில் பார்வையிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இணையவாயிலாக நாடெங்கிலுமுள்ள இரண்டாயிரத்திற்க்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளதுடன், ஆர்வலர்கள் http://event.jfn.ac.lk/eclipse/ எனும் இணையதளத்தில் தமது பதிவை முற்கூட்டியே கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை நாளைய தினம் ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது என்பதுடன், மீண்டும் இதேபோன்றதொரு சூரிய கிரகணம் 2031ஆம் ஆண்டு மே 16ஆம் திகதி தான் நிகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
