முல்லைத்தீவில் கால்நடைகளை பராமரிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் பண்ணையாளர்கள்!

முல்லைத்தீவு

இருட்டுமடு பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையின்மை மற்றும் கால்நடைகளை பராமரிக்கக் கூடிய மேட்டு நிலங்கள் இன்மையால் தற்போதைய மழை வெள்ளம் காரணமாக கால்நடைகள் இறந்து வருவதாகவும் உள்ள கால்நடைகளை பராமரிப்பதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட உடையார் கட்டு இருட்டுமடு கிராமத்தில் வாழும் கூடுதலான குடும்பங்கள் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பினையும் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பெய்து வருகின்ற மழை வெள்ளம் காரணமாக தமது பகுதிகள் யாவும் தாழ்வான பகுதிகளாக காணப்படுவதனால் தமது கால்நடைகளை கட்டி பராமரிப்பது.அல்லது பட்டிகளில் அடைத்து பராமரிப்பதற்குரிய மேட்டு நிலங்கள் இல்லாத நிலை மற்றும் கால் நடைகளுக்கான மேச்சல் தரைகள் இன்மை என்பவற்றால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறன நிலையில் கடந்த ஒரு சில நாட்களுக்குள் 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது பிரதேசத்தில் கால்நடைகளை பராமரிக்க கூடிய காடுகள் காணப்படுகின்ற போதும் கால்நடைகளை மேய்ப்பதற்காக மேய்ச்சல் தரைகள் இல்லை என்றும் கால்நடைகளை காடுகளுக்குள் வைத்து மேய்ப்பதற்கு வன வளத் திணைக்களம் அனுமதிப்பதில்லை என்றும் இதனால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாவும் தெரிவித்துள்ள பண்ணையாளர்கள் இவ்வாறு அதிகளவான கால் நடைகள் தொடர்ந்தும் இறப்பதனால்; பாரிய நட்டத்தை எதிர்கொள்வதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து நமக்கான மேய்ச்சல் தரைகளை ஒதுக்கித் தரும் அதேநேரம் இறந்துள்ள கால் நடைகளுக்கு இழப்பீடுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.