முல்லைத்தீவிலும் உணர்வுபூர்வமாக அனுக்ஷ்டிக்கப்பட்ட ஆழிப்பேரலை நினைவேந்தல்!

நினைவேந்தல்

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் வடுக்கள் மக்கள் மனங்களில் மறாத வடுவாக பதிந்துள்ள நிலையில் அதன் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாடெங்கிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

அந்தவகையில் முல்லைத்தீவிலும் ஆழிப்பேரலை நினைவு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அதற்கமைய இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று காலை ஆரம்பமாகிய நினைவேந்தல் நிகழ்வுகளில் இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் மத பிரார்த்தனை என்பன இடம்பெற்றது.

நிகழ்வுகளில் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் தங்களது உறவுகளை காவுகொடுத்த உறவுகள், மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை ஆழிப்பேரலை அனர்த்தத்தின் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 2900 பேருக்கு அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக அன்றைய காலகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.