புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட ஒட்டுசுட்டான் வீதிகளில் கழிவுகளைக் கொட்டினால் சட்ட நடவடிக்கை!

சட்ட நடவடிக்கை

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட ஒட்டுசுட்டான் வீதிகளில் கழிவுப் பொருள்களினை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று, புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் செ.பிறேமகாந் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், ஓட்டுசுட்டான் பகுதியில் உள்ள வீதியோரங்களில், கழிவுப்பொருள்கள் அதிகமாக வீசப்படுகின்றமையால், சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுகின்றனவெனவும் வீதிகளின் ஓரத்தில் வெற்றுப் போத்தல்கள் பேணிகள் போன்ற கழிவுப்பொருள்கள் அதிகளவில் வீசப்படுகின்றனவெனவும் கூறினார்.

இதனால் அவை சுகாதாரத்துக்கும் மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனவெனத் தெரிவித்த அவர், எனவே வீதிகளில் அல்லது ஓரங்களில் இம்மாதிரியான கழிவுகளைக் கொட்டுவோர் இனம் காணப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் கூறினார்.

கழிவுகளை ஓரிடத்தில் சேர்த்து வைத்து பிரதேச சபைக்கு அறிவிக்குமிடத்து, சபையின் கழிவகற்றல் பிரிவினர் அவற்றை எடுத்துச் சென்று அதற்கான இடத்தில் கொட்டுவார்கள், அதனை விடுத்து கண்ட கண்ட இடங்களில் கழிவுகளைக் கொட்டக்கூடாதெனவும் கூறினார்.

மீறிக் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமமெனவும் தமது கிராமத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்திருப்போம் என ஒவ்வொருவரும் நினைவில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும், அவர் கூறினார்.