மனைவியை மரணப்படுக்கையில் நண்பனிடம் ஒப்படைத்த கணவன்! மகிழ்ச்சியான முடிவை பெற்ற 21 வருட காதல்!

கேரளாவில்

67 வயது முதியவருக்கும், 65 வயது பெண்ணுக்கும் முதியோர் இல்லத்தில் திருமணம் நடந்த நிலையில் பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்கள்.

திருச்சூரை சேர்ந்தவர் லஷ்மி அம்மாள் (65). இவரின் கணவர் 21 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். சமையல் பணி செய்து வந்த அவரின் உதவியாளராகவும், நண்பராகவும் கோச்சானியன் (67) என்பவர் இருந்தார்.

லஷ்மியின் கணவர் மரணப்படுக்கையில் இருந்த போது என் மனைவிக்கு வெளி உலகம் பெரிதாக தெரியாது, என் இறப்புக்கு பின்னர் நீ தான் என் மனைவியை கவனித்து கொள்ள வேண்டும் என கோச்சானியனிடம் கூறிவிட்டு மரணமடைந்தார்.

பின்னர் ஆண்டுகள் உருண்டோடின. இந்த சூழலில் இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் சந்தப்ப சூழ்நிலையால் பிரிந்தனர். பின்னர் லஷ்மி ஒரு முதியோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார்.

அதே முதியோர் இல்லத்துக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் கோச்சானியன் அழைத்து வரப்பட்டார். அங்கு இருவர் மனதிலும் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருப்பது தெரிந்தது.

இவர்களின் வாழ்க்கை கதையை அறிந்து முதியோர் இல்ல நிர்வாகி ஜெயக்குமார் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தார்.

முதலில் 30ஆம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் திகதி மாற்றப்பட்டு நேற்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு முதியோர் இல்லத்திலேயே திருமணம் நடைபெற்றது.

அப்போது மணப்பெண் லஷ்மி சிவப்பு நிற பட்டுபுடவையிலும், மணமகன் கோச்சானியன் வேட்டி சட்டையிலும் ஜொலித்தனர். இந்த திருமணத்தில் மாநில வேளாண்துறை அமைச்சர் சுனில்குமார் கலந்து கொண்டார்.

இந்த நெகிழ்ச்சி தருணம் குறித்து ஜெயக்குமார் கூறுகையில், திருமணத்துக்கு முந்தைய தினம் லஷ்மிக்கு மெகந்தி வைக்கும் நிகழ்வு கூட நடந்தது.

என் வாழ்க்கையில் இது மறக்க முடியாத தருணம், கோச்சானியன் – லஷ்மி அம்மாள் திருமணத்தை பார்த்ததை பாக்கியமாக கருதுகிறேன். இந்த திருமணம் நடக்க உதவியவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

மணப்பெண் லஷ்மி கூறுகையில், எங்களுக்கு வயதாகி விட்டால் எவ்வளவு காலம் ஒன்றாக இருக்க முடியும் என தெரியவில்லை. ஆனால் நாங்கள் சந்தோஷமாக இருப்போம், எனக்காக தற்போது ஒருவர் உள்ளார் என்ற உணர்வு மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.