லண்டன் தேசிய மருத்துவ சேவையில் புதிய நடைமுறையைக் கொண்டுவந்த தமிழ் குழந்தையின் மரணம்!

அக்சரன் சிவரூபன்

கடந்த வருடம் (2018) டிசம்பர் மாதம் லண்டனில் வசிக்கும் ஈழத் தமிழ் தம்பதிகளின் மூத்த புதல்வனும், மூன்று மாதக் குழந்தையுமான அக்சரன் சிவரூபன் என்பவரது இறப்பு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் வெளியாகி அதிர்ச்சியையும், பிரித்தானிய வைத்தியத்துறையின் அக்கறையின்மையையும் வெளிப்பப்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் வெளியாகும் Evening Standard பத்திரிகையில் வெளிவந்த அதிர்ச்சிக்கும், கடும் சினத்திற்கும் உள்ளாக்கிய அந்த செய்தி இதுதான்.

லண்டன் சட்டன் பகுதியில் வசித்துவரும் சிவரூபன், தேவரதி தம்பதிகளின் மூத்த புதல்வனான அக்சரன் சிவரூபன் பிறந்தது லண்டன் கிங்ஸ்ரன் மருத்துவமனையில். மூன்று மாதக்குழந்தையான இவருக்கு இருதயத்தில் இரண்டு சிறிய துளைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அதேநேரம் ஹேனியா (Hernia) இருப்பதால் இருதய சிகிச்சைக்கு முன்னர் ஹேனியாவிற்கு சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுரை கூறினர்.

இதற்கிணங்க லண்டன் லம்பேர்த்திலுள்ள பிரபல எவிலினா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் நாள் அனுமதிக்கப்பட்டிருந்தார். வழமையான சிறிய சிகிச்சையின் பின்னர் அன்றே வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட அக்சரனுக்கு நிகழ்ந்தது கொ டுமை.

சிகிச்சைக்கு முன்னர் மயக்கமருந்து கொடுத்துவிட்டு, செயற்கை சுவாசக் குழாயை வாயின் வழியாக சுவாசக் குழாய்க்குப் பொருத்துவதற்குப் பதிலாக, வாய் வழியாக வயிற்றுக்குச் சாப்பாட்டை அனுப்பும் குழாயில் சிறப்புத் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படும் மருத்துவர்கள் பொருத்தி சிகிச்சையை ஆரம்பித்துள்ளனர். சிகிச்சை ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே சுவாசிப்பதற்கும், குழந்தையின் மூளைக்கும் ஒக்சிசன் கிடைக்காமல் இருதயம் செயற்பாடிழந்து, குழந்தை அக்சரனின் உயிர் பிரிந்திருக்கின்றது.

குழந்தை சுவாசிக்கும்போது காபன் டயொக்சைட் வெளியேறுகிறதா என்பதைக்கூடப் பரிசீலிக்காது மருத்துவர்கள் அலட்சியமாக இருந்தமை கவலையைத் தருகின்றது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் சுவாசப்பைக்கு சுவாசக் குழாய் பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது, மற்றும் குழந்தைகளுக்கான இவ்வாறான சிகிச்சையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி பிரித்தானிய சுகாதார சேவையும், மருத்துவமனை நிருவாகங்களும் அறிவுறுத்தியிருப்பது முக்கிய திருப்புமனையாகும்.

அதாவது, சுவாசப்பைக்கு சுவாசக் குழாய் பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும், உறுதி செய்யும் விதிமுறைகளை மருத்துவர்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இனிவரும் காலங்களில் இழப்புக்கள் தவிக்கப்பட்ட வாய்ப்பு இருக்கின்றது. அத்துடன், லண்டனின் சிறுவர்களுக்கான எவிலினா மருத்துவமனை நீதிமன்றத்தீர்ப்பை அடுத்து தமது சிகிச்சை முறையை முற்றாக மறுசீர் செய்துள்ளனர். பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய மருத்துவத்துறையினர் இவற்றைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள், ஏனைய மருத்துவர்கள், மற்றும் தாதிகளின் கவனக் குறைவு காரணமாக இவ்வாறான உயிரிழப்புக்கள் அக்சரனின் பெயரால் தவிக்கப்பட்ட வேண்டும் என்பதே சிவரூபன், தேவரதி தம்பதிகளின் விருப்பாகும்.

தமது மூத்த குழந்தையின் இழப்பின் துயரில் துவண்டிருக்கும் ரூபன் குடும்பத்தினரின் கரம் பற்றி ஆறுதல் கூறி, துயர் பகிர்வதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும்.

இது தொடர்பாக Evening Standard வெளிவந்த செய்தியை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்.