மட்டக்களப்பு

வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், மரணித்த குழந்தையொன்றின் சடலம், 06 நாள்கள் கடந்த நிலையிலும் சட்ட வைத்தியப் பரிசோதனை நடத்தப்படாமல், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் தெரிவித்தார்.

பாம் கொளனி, மாங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் – சவுந்தரி தம்பதியினரின் ஒரு வயதான பாலசுந்தரம் ஷாலினி என்ற குழந்தைக்கே, இக்கதி நேர்ந்துள்ளது.

இந்தக் குழந்தைக்கு, இம்மாதம் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு, தாய்ப்பாலூட்டத் தயாரானபோது, குழந்தை உறக்கத்திலேயே சளி அடைத்த நிலையில் மரணித்திருந்ததாக, குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினமே, வாகரைப் பொலிஸாரின் உதவியுடன், மரணித்த குழந்தை மீட்கப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

எனினும், குறித்த வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் கடமையில் இல்லாததால், குழந்தையின் உடற் கூறாய்வுப் பரிசோதனையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் நீதிபதியின் உத்தரவின் பேரில், திருகோணமலையிலுள்ள சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக, குழந்தையின் சடலம், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று (30) மாலை வரையில் குழந்தையின் இறப்பு பற்றிய உடற் கூறாய்வுப் பரிசோதனைகள் இடம்பெறவில்லை எனத் தெரியவருகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை கடமையிலிருந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரியான எஸ்.எம்.டி பிரசாதினி செனரத், சட்ட வைத்தியத்துறை மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் நோக்கில், இம்மாதம் 15ஆம் திகதியன்று விலகிச் சென்றதன் பின்னர், அவ் வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி இல்லாத குறை நிலவி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
