முல்லைத்தீவு இளைஞர்களின் முன்மாதிரியான செயல்!

கடந்த சில வாரங்களாக, நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து, நகரங்களிலும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களிலும் இருக்கும் சுவர்களை, வர்ணமயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள வீதியோரப் பொதுச் சுவர்கள் மற்றும் பொது கட்டடங்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டு, அந்த சுவர்களில் ஓவியங்கள் வரையும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் முல்லைத்தீவு புதிய பேருந்து தரிப்பிடத்துக்கு அண்மையில் இருக்கிற பலநோக்கு கூட்டுறவு சங்க சுவர் முல்லைத்தீவு இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மிக அழகாக மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஓவியங்கள் இயற்கையின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கக் கூடிய ஓவியங்களாகவும் சிந்தனையைத் தூண்டக்கூடிய ஓவியங்களாகவும் காணப்படுகின்றமை சிறப்பம்சம்.

இளைஞர்களின் நேரத்தை பயனுள்ள விதமாக மாற்றுவதுடன் அவர்களின் சிந்தனைகளை சித்திரமாக்கும் திட்டம் மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் முல்லைத்தீவில் இளைஞர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.



