பாராளுமன்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தினார் ஜனாதிபதி கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (3-1-2020) ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது ஜனாதிபதிக்காக தீர்க்கப்படவிருந்த 21 மரியாதை வேட்டுக்கள் மற்றும் வீதியின் இருமருங்கிலும் இடம்பெறவிருந்த இராணுவ மரியாதை ஆகிய சம்பிரதாயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய இடம்பெறாது என பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய, அதி விசேட வர்த்தமானி மூலம் கடந்த இரண்டாம் திகதி பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

நாளை (3-1-2020) காலை 10 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தொடரின் தலைமை உரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆற்றவுள்ளார். இதன்போது அரசியலமைப்பின் பிரகாரம், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி முன்வைக்கவுள்ளார்.

அரசாங்கத்திற்கு வீண் செலவுகளை ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார். அதற்கமைய கடந்த ஒன்றரை மாதங்களில் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானங்கள் காரணமாக அரசாங்கத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபா செலவு குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.