முதன்முறையாக விமானத்தில் பறக்கவிருந்த நபர்: உயிர் பயத்தில் செய்த காரியத்தால் நடந்த விபரீதம்!

சீனா

விமான பயணத்தின் போது அசம்பாவிதம் ஏற்பட கூடாது என்பதற்காக பயத்தில் நாணயங்களை தூக்கி வீசிய நபருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த லு சாவோ என்ற 28 வயது நபர், கடந்த ஆண்டு பிப்ரவரி 17 ஆம் திகதி அன்று, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஏங்கிங்கிலிருந்து குன்மிங்கிற்கு லக்கி ஏர் விமானத்தில் பறக்க இருந்தார்.

முதன்முறையாக விமானத்தில் ஏறிய அவர், உயிர்பயத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக பிராத்தனை செய்துவிட்டு 2 நாணயங்களை விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக வீசி எறிந்துள்ளார். அதில் ஒருநாணயம் அடியிலும், மற்றொன்று இடது இயந்திரத்தின் முன்னால் ஒரு மீட்டர் (3.3 அடி) தரையிலும் காணப்பட்டது.

160கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் அன்று இரவு தங்கவைக்கப்பட்டனர். மறுநாள் காலையில் வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னரே அங்கிருந்து அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட லு சாவோ மீது, நாணயங்களை இயந்திரத்தின் முன் வீசி பாரிய விபத்து ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக வழக்கு பதியப்பட்டது.

லு சாவோவின் மூட நம்பிக்கையால் அன்று இரவு மட்டும் பயணிகளை தங்கவைத்து, மாற்று விமானத்தில் அனுப்பியதற்காக 140,000 யுவான் (இந்திய மதிப்பில் 14,31,000) செலவானதாக விமான நிர்வாகம் புகாரில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணைகளை கேட்டறிந்த நீதிமன்றம், லு சாவோவிற்கு 123,358 யுவான் அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.