நாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை

எதிர்வரும் தேசிய சுதந்திர தினத்தன்று இலங்கையர்கள் அனைவரதும் வீடுகளில் மரக்கன்று ஒன்றை நடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர தினம் தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தின பேரணியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 30 வீதத்தினால் குறைத்துக் கொள்வதற்கும், தலைப்பிற்கு பொருத்தமான வகையில் அவசியமானவர்களை மாத்திரம் பங்கு பெற செய்வதற்கும் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளார்.

சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பிரயோசனமான மரக்கன்று ஒன்றை நடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு தடை ஏற்படுத்தாத வகையில் நிகழ்வுகள் இடம்பெறும் பிரதேசங்களில் பாதுகாப்பினை உறுதி செய்தல், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பிரதமர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.