14000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

முல்லை நியூஸ் செய்திகளுக்காக படங்கள் Theivendran Thiruneepan

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 14,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கெளரவ பிரதமரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் “கமட்ட கெயக் – ரட்டட்ட ஹெட்டக்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் விஜித கமகே தலைமையில், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கனகேஸ்வரன், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர், பொறியியலாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், அரசியல் பிரமுகர்கள், மதகுருமார்கள், பிரதேச மக்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன், இன்று (01) கணுக்கேணி மேற்கு முள்ளியவளையில் முதலாவது வீட்டிற்கான அடிக்கல்லினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சதாசிவம் கனகரத்தினம் அவர்கள் நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கடந்த போராட்ட காலங்களை விடுத்து இனிவரும் காலங்களில் என்னுடன் இணைந்து அரசாங்கத்திற்கு ஆதரவளித்து நமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.

வறுமைக் ​கோட்டின் கீழுள்ள சகல குடும்பங்களுக்கும் சகல வசதிகளையும் கொண்ட நிரந்த வீடொன்றை கையளிப்பதன் மூலம், வெற்றிகரமாக பொருளாதார இலக்கை அடைய, குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 2020 ஆம் ஆண்டுக்குள், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் குடியிருப்புப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க, மேற்குறித்த வேலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், சகல கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, தலா ஒரு வீடு என்ற அடிப்படையில், 60 நாட்களில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.