கொரோனா பாதித்தவர்களுடன் சிக்கி கொண்டு பீதியில் இருக்கும் தமிழர்! அவரை காப்பாற்றுமாறு கலங்கும் மனைவி!

கொரோனா

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் ஜப்பான் கப்பலில் தவிக்கும் தனது கணவரை மீட்க வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த பெண் கண்ணீர் மல்க கோரியுள்ளார்.

மதுரையை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த “டைமண்ட் பிரின்சஸ்”என்ற சொகுசு கப்பலில் அன்பழகன் பணி புரிந்து வருகிறார்.

ஒவ்வொரு நாடாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் இந்த கப்பலில் 3 ஆயிரத்து 500 பயணிகளில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறி ஜப்பானில் உள்ள யகோகாமா துறைமுகத்தில் கடலிலேயே அந்த கப்பல் நிறுத்தப்பட்டது.

கடந்த 8 நாட்களாக பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாரையும் கப்பலில் இருந்து வெளியே அனுமதிக்கவில்லை.

மருத்துவக் குழுவினர் கப்பலுக்குள் சென்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அன்பழகன் கப்பலில் இருந்தபடியே தனது மனைவி மற்றும் குடும்பத்தினர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஒரு வீடியோ அனுப்பினார்

நாங்கள் 6 தமிழர்கள் கப்பலில் மாட்டி கொண்டோம்

தாய்லாந்துக்கு கப்பல் சென்றபோது அங்கிருந்து பயணித்த ஒரு முதியவர் மூலம் கொரோனா வைரஸ் மற்ற கப்பல் பயணிகளுக்கும் பரவியது. இதுவரை கப்பலில் 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.

எங்களுக்கும் வைரஸ் தொற்று வருமோ என ஒவ்வொரு நிமிடமும் பயத்துடன் கடந்து வருகிறோம், எங்களை காப்பாற்றுங்கள் என கூறியிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்து கண்கலங்கிய அவரது மனைவி மல்லிகா மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அதில், ஜப்பான் துறைமுகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் என் கணவர் தவித்து வருகிறார்.

என் வாழ்க்கையின் ஆதாரமே அவர் தான். அவரது வருமானத்தில் தான் காலம் கழித்து வருகிறோம்.

எனவே மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து என் கணவரை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.