லட்சங்களில் கடன்… மனைவிக்கு தெரியாமல் லொட்டரி வாங்கிய கூலித்தொழிலாளிக்கு கொட்டிய பண மழை!

லொட்டரி

கேரளாவில் மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்த தினக்கூலி தொழிலாளிக்கு லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசுத்தொகை விழுந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த 55 வயதான ராஜன் என்பவர் தினக்கூலி தொழிலாக வேலை செய்துகொண்டே, தனது குடும்பத்தையும் கவனித்து வருகிறார்.

இவர் தனது மூத்த மகள் அதிராவின் திருமணத்திற்காகவும், வீட்டை புதுப்பிப்பதற்காகவும் வங்கியில் வாங்கியிருந்த கடன் 7 லட்சத்தை தாண்டியிருந்தது.

இதனால் வீட்டு வேலைகளை முழுவதும் முடிக்க முடியாமல், கடனையும் கட்ட முடியாமல் திணறி, மனஅழுத்ததில் இருந்து வந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் மீண்டும் கடன் வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது ரூ.300க்கு ஒரு லொட்டரி டிக்கெட் ஒன்றினை வாங்கியுள்ளார்.

இதுபற்றி மனைவிக்கு தெரிந்தால், பணத்தை வீணடித்துவிட்டதாக திட்டுவார் என நினைத்து யாருக்கும் தெரியப்படுத்தாமல் ரகசியம் காத்துள்ளார்.

இந்த நிலையில் லொட்டரியின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட போது, நம்பிக்கை இல்லாமலே அவர் கடைக்கு சென்று தனது லொட்டரி எண்களை சரி பார்த்துள்ளார்.

அப்போது அவருக்கு ரூ.12 கோடி பரிசுத்தொகை கிடைத்திருப்பது தெரியவந்தது. அவருடைய குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துள்ளனர். எப்போதும் கோபத்துடன் பார்க்கும் மனைவி ராஜனி, அவரை பார்த்து புன்னகைத்துள்ளார்.

இதனையடுத்து அவர் தோலன்ராவில் உள்ள மாலூர் சேவை கூட்டுறவு வங்கியில் தனது டிக்கெட்டை ஒப்படைத்தார்.

தற்போது கிடைத்திருக்கும் பரிசுத்தொகையால் வங்கியில் இருக்கும் ரூ.7 லட்சம் கடனை அடைப்பதோடு வீட்டு வேலைகளையும் முடித்துவிடுவேன். 12ம் வகுப்பு படித்து வரும் எனது இளைய மகள் அக்சராவையும் மேற்படிப்பு படிக்க வைப்பேன் என ராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.