கொரோனா வைரஸ் தொற்று! வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பக்தர்களிடம் ஓர் வேண்டுகோள்!

வற்றாப்பளை கண்ணகி அம்மன்

வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பங்குனி திங்கள் உற்சவத்துக்கு பக்தர்கள் வருகை தருவதை தவிர்த்து கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பங்குனி திங்கள் உற்சவம் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் இடம்பெற்று வருகிறது.

இந்த உற்சவத்திற்கு அதிகளவான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைதந்து பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் தலைமையில் நேற்றைய தினம் ஆலய அறங்காவலர் சபையினருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

அந்த கலந்துரையாடலின் பிரகாரம் இறுதி முடிவு எடுக்கப்பட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆலய அறங்காவலர் சபை தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

சுகாதார திணைக்களத்துடன் இணைந்து நாம் இந்த அறிவித்தலை விடுகின்றோம். அதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த அறிவித்தலை கடைபிடிக்குமாறு கேட்டுகொள்கின்றோம்.

இந்த காலபகுதியில் அடியவர்களின் நேர்த்திக்கடன்களையும் விசேடமான வழிபாடுகளை தவிர்க்குமாறும் கேட்டுகொள்கின்றோம்.

ஆலயத்தில் நடைபெறுகின்ற வழமையான கருமங்கள் இக்காலப்பகுதியில் தடையின்றி நடைபெறும். ஆனால் மக்கள் கூடுவதை குறைக்கும்படி கேட்டுகொள்கின்றோம்.

இக்காலபகுதியில் ஆலய பகுதியில் இடம்பெறும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான அனுமதிக்க எவையும் வழங்கப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம்.

எனவே இந்த அறிவித்தலை அம்மன் அடியவர்கள் அனைவரும் பூரணமாக ஏற்றுக்கொண்டு செயற்படுமாறும் ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.