கொரோனா வைரஸ் – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59 : 95 சதவீதமானோர் இலங்கையர்!

கொரோனா வைரஸ் – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59 : 95 சதவீதமானோர் இலங்கையர்

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக இதுவரையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59 ஆகும். நோயின் தாக்கத்துக்கு உள்ளானவர்களில் 95 சதவீதமானவர்கள் இலங்கையர் என்றும், 5 சதவீதமானோர் வெளிநாட்டவர் என்றும் சகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோயாளர் இருவர் மத்தியில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் கூறினார்.

ஏனைய இருவரும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்தில் கண்டறியப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நாளைமுதல் கொழும்பு வடக்கு வைத்தியசாலை அல்லது முல்லேரியா வைத்தியசாலை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக முன்னெடுக்கப்படும் என்று டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 59 பேரில் 45.2 சதவீதமானோர் 5 தொடக்கம் 41 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர் என்று பணிப்பாளர் நாயகம் கூறினார். இதே போன்று நோயினால் பாதிக்கப்பட்ட 16 சதவீதமானோர் 31 க்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று கூறினார். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதமானோர் ஆண்கள் என்றும் 19 சதவீதமானோர் பெண்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த 59 பேரில் வெளிநாட்டில் இருந்து வந்த இலங்கையர் 25 பேர் அடங்கியுள்ளனர். இதில் 22 பேர் இத்தாலியில் இருந்தும், இருவர் பிரிட்டனில் இருந்தும், மற்றுமொருவர் இந்தியாவில் இருந்தும் வந்திருப்பதாக அவர் கூறினார்.

இதேபோன்று இந்திய நாட்டவர் ஒருவரும், ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் தற்பொது நாட்டில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் அடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.