சளி இருமலை நீக்கும் 20 எளிய வைத்தியங்கள்: (ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்)

சளி இருமலை நீக்கும் 20 எளிய வைத்தியங்கள்

1.தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

2.மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

3.வெங்காயம் சளியை முறிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும். கவனிக்க.. சின்ன வெங்காயத்தை சமைக்காமல், அப்படியே பச்சையாக சாப்பிட்டு வர வேண்டும்.

4.மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை பறந்து போய் விடும்.

5.மிளகுப் பொடியை ஒரு காட்டன் துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்.

6.தேன் மற்றும் இஞ்சி சாற்றை சம அளவு  கலந்து அருந்தி வந்தால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

7.நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு காய்ச்சி ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

8.கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க, கொள்ளு சூப் அருமையான மருந்து.

9.கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.

10.தினமும் சிறிதளவு தேன் சாப்பிட்டு வந்தால், சளி எட்டிப் பார்க்கவே பயந்து ஒதுங்கும். சுத்தமான தேனில் இருக்கும் வைட்டமின்கள், ஜலதோஷத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

11.தினமும் ஒன்றிரண்டு துளசி இலைகளைச் சாப்பிட்டு வந்தால் சளி பிடிக்காது.

12.சின்ன வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வந்தால் சளியும், இருமலும் காணாமல் போய்விடும்.

13.சூடான பசும்பாலில் ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.) ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரையில் இருவேளை காலை, மாலை பருகி வந்தால் இருமல் இருந்த இடமே தெரியாது.

14.தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்

15.சளி அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது. இரண்டு நாட்களிலே நல்ல குணமாகிவிடும்.

16.சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத் தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வைத்துக்கொண்டு, தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வர சளி சரியாகிவிடும்.

17.ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி, அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

18.ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும்

19.சளி இருமலை போக்க பூண்டு நல்ல மருந்து. 4 அல்லது 5பூண்டு பற்களை எடுத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து பூண்டு பல்லை வதக்கவும். சூடாக இருக்கும் போதே இதை சாப்பிட்டு விட்டால் சளி, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

20.ஜலதோசத்தின் போது தொண்டைவலியும் நிரந்தரமாகவே நம்மை படுத்தி எடுக்கும். இளஞ்சூடான வெந்நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்புளிக்கவேண்டும். இது உடனடியாக செலவில்லாத எளிய வழிமுறை. தொண்டையில் வலியை குறைத்து சளியையும், இருமலையும் போக்கும்.