பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் பஞ்சு.. வயிற்று வலியால் துடிதுடித்த பெண்மணி!

தமிழகம்

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சார்ந்தவர் வாஞ்சிநாதன். இவரது மனைவியின் பெயர் முத்துச்செல்வி. முத்துச்செல்வி கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் 23 ஆம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து காரில் தனது மனைவியை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே குழந்தை பிறந்துள்ளது. இதன்பின்னர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொப்புள் கொடியை அகற்றி, கருப்பையை சுத்தம் செய்து, மேல் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலைய வைத்தியர் காஞ்சனா பரிந்துரை செய்துள்ளார்.

இதன்படி, தம்பதிகள் கம்பம் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், வீட்டிற்கு திரும்பிய நாட்களில் இருந்து முத்துசெல்விக்கு அடிவயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 15 ஆம் தேதி அங்குள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதி செய்யவே, வைத்தியசாலையில் முத்துசெல்விக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனையில், முத்துசெல்வியின் வயிற்றில் கையளவு பஞ்சு இருந்துள்ளது. இதனை தனியார் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய நிலையில், மனைவியின் வயிற்றில் பஞ்சை வைத்து தைத்த வைத்தியர் காஞ்சனாவின் மீது நடவடிக்கை எடுக்க கூறி வாஞ்சிநாதன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இது குறித்த முறைபாட்டை ஏற்ற பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வைத்தியர் காஞ்சனா தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஞ்சிநாதன் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு வருவதாகவும் வைத்தியர் காஞ்சனா குற்றம் சுமத்தியுள்ளார். தனியார் மருத்துவமனையின் சார்பாக பஞ்சு முழுவதும் முத்துசெல்வியின் உடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது என்றும், அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மருத்துவ விசாரணை நடைபெற்று வருகிறது.