கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்!

கத்தரிக்காய்

குறைந்த கலோரியும் நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. கத்தரிக்காயின் தாயகம் இந்தியாதான். ஆண்டு முழுவதும் விளையக்கூடியது. உலகம் முழுவதுமுள்ள வெப்பமண்டல பகுதிகளில் கத்தரிக்காய் விளைகிறது. பச்சை, வெள்ளை, அடர் நீலம் என பல நிறங்களிலும், முட்டை வடிவம், நீள வடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் கத்தரி விளைகிறது.

கொழுப்பு சத்து குறைந்தது கத்தரிக்காய். குறைந்த ஆற்றல்தரக் கூடியது. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது. 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. ‘ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் அதிக பங்கெடுப்பதாக பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று கண்டறிந்துள்ளது.

அடர் நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும். புற்றுநோய், முதுமை, நரம்பு வியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தன்மை வழங்கும்.

‘பி காம்ப்ளக்ஸ் வகை விட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (விட்டமின் பி 5), பைரிடாக்சின் (விட்டமின் பி 6), தயமின் (விட்டமின் பி 1), நியாசின் (விட்டமின் பி 3) ஆகியன அடங்கி உள்ளன. கொழுப்பு, புரதம் மற்றும் காபோஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றித்திற்கும் உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த விட்டமின்கள் அவசியமாகும்.

கத்தரிக்காயில் தாதுஉப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மாங்கனீசு நோய் எதிர்ப்பொருள்களின் துணைக் காரணியாக செயல்படும் பொட்டாசியம் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடற்செல்களின் எரிபொருளாகவும் பயன்படுகிறது.