சென்னை
தமிழகத்தில் சென்னையில் உள்ள ஆவடி மோரை கிராமத்தின் திருமலை நகர் பிரதேசத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இவரது மைத்துனர் நரேஷ் குமார் (வயது 30). இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில், பணி முடிந்து சரவணன் மற்றும் நரேஷ்குமார் இரு சக்கர வாகனத்தில் ஒன்றாக வீட்டிற்கு வந்து கொண்டு இருந்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தை சரவணன் இயக்கிய நிலையில், பின்னால் நரேஷ்குமார் அமர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் வண்டலூர் – மீஞ்சூர் சாலையில் ஆவடி வெள்ளானூர் அருகே வந்துகொண்டு இருந்த போது, எண்ணுரில் இருந்து ஓரகடத்திற்கு நிலக்கரி ஏற்றி சென்ற லாரி பழுதாகி வீதி ஓரத்தில் நின்று கொண்டு இருந்துள்ளது.

இதனைக்கவனிக்காத சரவணன் லாரியின் மீது இரு சக்கர வாகனத்தில் மோதவே, வாகனத்தில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் காவல் துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார், இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், குறித்த விபத்து தொடர்பில் லாரி ஓட்டுநராக காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணம் பின்னலூர் கிராமத்தை சேர்ந்த பிரபு என்ற நபர் பொலீஸாரால்கைது செய்யப்பட்டுள்ளார்.