எச்சரிக்கை!
கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் அது சமூகப்பரவல் வரை விருத்தியடையும் வாய்ப்புள்ளதாக இலங்கை விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலைமை தீவிரமடைந்தால் இலங்கையின் சுகாதார வசதிகளைக் கருத்திற்கொள்கையில், அது பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தக்கூடும் என விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் L.A.ரணசிங்கவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவின் தாக்கம் மோசமடைவதற்கு முன்னர் அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தகுந்த நடவடிக்கைகளையும் வரையறைகளை விதிக்குமாறு அரசாங்கத்திடம் மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய பொது மக்கள் ஒன்றுகூடும் அரசியல் கூட்டங்களை நடத்துதல், வகுப்புக்களை நடத்துதல் மற்றும் பாடசாலைகளை மீளத் திறத்தல் தொடர்பில் மீளாய்வு செய்யுமாறும் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் நாட்டில் பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் சுகாதார கட்டுப்பாடுகளை மீண்டும் பிறப்பிக்க வேண்டியதன் தேவை குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் சமூகத்தில் எழுமாற்றாக தெரிவு செய்து பரிசோதனை நடத்துவதுடன், PCR பரிசோதனை நடவடிக்கையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை போதுமானதல்ல என அரச மருத்துவ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாதமொன்றில் குறைந்தபட்சம் 68 ஆயிரம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அதற்காக நாள்தோறும் 2500 பரிசோதனைகளேனும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.