கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது மோதிய டிப்பர் வாகனம்!

விபத்து

கிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோதி நேர்ந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரந்தாய் சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் மீதே கிளிநொச்சி பகுதியில் இருந்து வேகமாக மண்ணுடன் வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.

டிப்பர் வாகனமானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின் பகுதியில் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவத்தில் காயமடைந்த பேருந்து பயணி நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.