இலங்கையில் இன்று முதல் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கை!

வாகன சாரதிகளுக்கான அறிவிப்பு!

இலங்கை நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் மற்றும் நடைபாதைகளில் வாகனங்களை தரித்து நிறுத்துதல் தொடர்பில், இன்று முதல் விசேட நடவடிக்கை மேற்கொள்ப்படுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். இவ் விசேட நடவடிகையில் போக்குவரத்து பொலிசார் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய நெடுஞ்சாலைகளின் இரு பக்கங்களிலும், அனுமதிக்கப்படாத இடத்தில் மற்றும் பாதசாரிகளுக்கான நடைபாதையில் வாகனங்களை தரித்து நிறுத்துவதால், விபத்துகள் ஏற்படுதல் மற்றும் பாதசாரிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுதல் ஆகிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக தற்போது நாட்டில் அதிக விபத்துகள் சம்பவிக்கின்றன. அத்துடன் இவ்வாறு நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் பாதசாரிகள் வீதிகளில் செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தரித்து நிற்க தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் மற்றும் பாதசாரிகள் நடைபாதையில் வாகனங்களை தரித்து நிறுத்த வேண்டாமென, வாகனங்களின் சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையை கருத்தில் கொண்டே இலங்கையில் நாளை முதல் மேற்கொள்ளப்படவுள்ள இந்நடவடிக்கையில், அவ்வாறான வாகனங்கள் அடையாளம் காணப்படுமாயின் வாகனங்களை அங்கிருந்து எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்நடவடிக்கைகளுக்கான வாகனங்கள் மூலம் இவ்வாறான சட்ட நடவடிக்கையின்போது குறித்த வாகனத்தை எடுத்துச் செல்வதற்கு ஏற்படும் செலவும் அதன் உரிமையாளரிடம் இருந்து அறவிடப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறானோருக்கு எதிராக, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மற்றும் தேசிய வீதிகள் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவும் பொலிசார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். அவ்வாறான சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் மூலம் அபராதம் அல்லது சிறைத்தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்பும் காணப்படுவதாகவும், தேசிய வீதிகள் சட்டத்தின் கீழ், ரூபா 50 ஆயிரம் வரையான அபராதம் விதிப்பதற்கும் நீதிமன்றத்தினால் முடியும் என, அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இவ்வாறு நடைபாதையில் வாகனங்களை தரித்து நிறுத்தும் போது நடைபாதைக்கு ஏதேனும் சேதங்கள் ஏற்படுமாயின், பொதுச் சொத்துகள் தொடர்பான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.