பிரதமர் மஹிந்த ராஜபக்ச
இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டை முடக்க வேண்டிய எந்தவிதமான தேவையும் ஏற்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இது அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் சில தீய சக்திகளாலும் எதிரணியினராலும் வேண்டுமென்றே மக்களிடையே பரப்பப்படும் போலியான பிரசாரமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் இந்த கருத்தை அலரிமாளிகையில் நேற்று நாட்டிலுள்ள பிரதான ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்து சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக கலந்துரையாடிய போதே தெரிவித்துள்ளார். சிலர் நாட்டை முடக்க வேண்டும், முழு நாட்டுக்கும் ஊரடங்கு சட்டத்தை அமுலாக்க வேண்டும் என்ற திட்டத்தில் சில ஊடகங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மையில் அவை எவற்றுக்கும் இப்போது எந்தவிதமான அவசியமுமில்லை எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த கலந்துரையாடலின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்தன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, சுகாதாரத் திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க மற்றும் தகவல் திணைக்களப்பணிப்பாளர் நாயகம் நாலக்க ஆகியோரும் கலந்து கொண்டு மேலும் இது தொடர்பிலான கருத்துக்களை தெரிவித்தனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பலவிதமான போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமாக பரப்பப்பட்டு வருகின்றன.
ஆனால் அவை எவற்றிலும் உண்மை இல்லை. உண்மையான நிலைமையை சுகாதார பிரிவினரும் அதனுடன் தொடர்புடைய இராணுவத்தினர் மற்றும் போலிஸார் ஆகியோர் மிக உன்னிப்பாகக் அவதானித்து வருகின்றனர்.
ஏதாவது ஒரு பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் எவராவது பாதிக்கப்பட்டிருந்தால் அந்தப் பிரதேசத்தை மட்டும் தனிமைப்படுத்தி அங்குள்ளவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது. அதற்கமையவே அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இது தேர்தல் காலம் என்பதால் வதந்திகள் பலவிதமாக பரப்பப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தையும் நடைபெறவிருக்கும் தேர்தலையும் குழப்புவதற்காக ஒரு சிலர், சில ஊடகங்களைப் பயன்படுத்தி இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.
எனவே ஊடகத்துறையில் தொடர்புள்ளவர்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானத்துடன் நம் நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டுமெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.
நாட்டில் முதலாவது கொரோனா வைரஸ் தாக்கலுக்குள்ளானவர் கண்டுபிடிக்கப்பட்டது முதல் அரசாங்கம் அதனை முறியடிக்கும் முயற்சிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றதெனவும் பிரதமர் இதன் போது தெரிவித்தார்.