குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று.. அடுத்தடுத்து ஒவ்வொருவராக இறந்த சகோதரர்கள்!

இந்தியா

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பிரிம்பிஹான் பகுதியை சேர்ந்தவர்கள் போபட்ராவ் கலப்யூர், டைனேஸ்வர் கலப்யூர், திலீப்ராவ் கலப்யூர் ஆகிய மூன்று சகோதரர்களும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் குடும்பத்தில் மொத்தம் 18 பேர் உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் இவரது கூட்டுக் குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை .குடும்ப உறுப்பினர்களில் முதல் நபராக வாலிபர் ஒருவருக்கு கடந்த 5ஆம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கலப்யூர் சகோதரிகள் உட்பட குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலப்யூர் சகோதரர்கள் அடுத்தடுத்து உயிழந்தனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு முதல் நபராக திலீப்ராவ் கலப்யூர், ஜூலை 10 ஆம் தேதி உயிரிழந்தார். அவரை தொடர்ந்து ஜூலை 15 ஆம் தேதி டைனேஸ்வர் கலப்யூர் உயிரிழந்தார். போபட்ராவ் கலப்யூரும் ஜூலை 18 ஆம் தேதி கொரோனா வைரசால் உயிரிழந்தார்.

ஒன்பது நாட்களில் மூன்று சகோதரர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். இச்சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.