யாழ் நல்லூர் ஆலத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

நல்லூர் ஆலயத்திற்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பொலிஸாரினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நல்லூர் ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் ஆலய உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன நாளை ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவரும் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட சோதனை சாவடியில் அடையாள அட்டையினை காண்பித்தே ஆலயத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருபவராக இருந்தால் அவர் தனிமைப்படுத்தலுக்குட்பட்டவர் என்ற சான்றிதழை காண்பித்த பின்னரே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்.

மேலும் ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து ஆலயத்திற்கு வருகை தர வேண்டும் எனவும் சுகாதார நடைமுறையினை பின்பற்றும் முகமாக கைகளை நன்றாகக் கழுவி உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடையாள அட்டையினை காண்பித்து அடையாள அட்டை மற்றும் அவர்களது முகம் கமராவில் பதிவு செய்யப்பட்ட பின்னரே ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இம்முறை நல்லூர் உற்சவமானது மிகவும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் பெருமளவில் ஆலயத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.