கொரோனாவின் புதிய நிலைமையினால் பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினங்களில் திருத்தம்- கல்வி அமைச்சு!

கல்வியமைச்சின் முக்கிய அறிக்கை!

இலங்கையில் எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் அரசாங்கத்தின் அனைத்து பாடசாலைகளும் தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருப்பதாக ஏற்கனவே கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டிரு்நதது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

கொரோனா வைரஸ் தொற்று பரவுவது தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் மற்றும் தரங்களுக்கான கற்கை நெறிகள் மற்றும் பரீட்சை நடைபெறும் தினங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய தரம் 11, 12 மற்றும் 13 வகுப்பு கல்வி நடவடிக்கைகள் காலை 7:30 மணி தொடக்கம் பிற்பகல் 3:30 மணி வரையில் நடைபெறும்.

மற்றும் ஏனைய தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

குறிப்பாக மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் போது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விசேட ஆலோசனைக்கு அமைவாக அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

2020 பொதுத் தேர்தலுக்காக பாடசாலைகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அது தொடர்பில் தெளிவுபடுத்தல் நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் ஆகியோர் ஜுலை மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் பாடசாலையில் இருக்க வேண்டும்.

இந்த காலப்பகுதிக்குள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாத வகையில் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளில் வசதிகளை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அலோசனை வழங்கியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.