தன்னை தானே அடையாளம் காட்டிய கொரோனா நோயாளி!கண்டு பிடித்தவர்களுக்கு பணப் பரிசில் வழங்கும் பொலிஸார்!!

கொழும்பில் தன்னை தானே அடையாளம் காட்டிய கொரோனா நோயாளி!

கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி நேற்றைய தினம் தப்பிச் சென்ற நிலையில் அவர் சுமார் 8 மணிநேரத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.

குறித்த நோயாளியை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நோயாளிகள் பிரிவிற்கு அருகில் வைத்து, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் இருவர் முதலில் அடையாளம் கண்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை உணவகத்திற்கு சென்று கொண்டிருந்த ஊழியர்கள் இருவர் இந்த கொரோனா நோயாளியை அடையாளம் கண்டுள்ளனர்.

 

“வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தான்….. என்னை தான் பொலிஸார் தேடுகின்றார்கள்…..”என அந்த நபர் வைத்தியசாலை ஊழியர்கள் இருவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக செயற்பட்ட ஊழியர்கள் அவரை அருகில் ஒரு இடத்தில் இருக்கக் கூறி விட்டு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளர்.

வைத்தியசாலை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவிடம் தெரியப்படுத்தியுள்ளனர். அதற்கமைய நோயாளி அமர வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் பொது மக்களை வருவதனை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தேசிய வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பின்னர் பாதுகாப்பு ஆடைகள் அணிந்துக் கொண்ட தாதிமார்கள் இருவர் அந்த நோயாளிக்கு பாதுகாப்பு ஆடை ஒன்றை வழங்கியுள்ளனர். இந்த நோயாளி கொழும்பு, புறக்கோட்டை நேர் வீதியில் இருந்து தேசிய வைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் வருகைத்தந்துள்ளார்.

இந்த நோயாளி IDH வைத்தியசாலையில் இருந்து சென்ற இடங்கள் பழகிய நபர்கள் தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த நோயாளியை கண்டுபிடிக்க உதவிய சுகாதார ஊழியர் மற்றும் மேலும் இருவருக்கு பணப் பரிசில் வழங்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய பிரதி பொலிஸ் மா அதிபரின் ஊடாக இவர்களுக்கான பணப் பரிசில் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.