கணவனை இழந்ததும் மகன்களால் விரட்டப்பட்ட தாய்க்கு எதிர்பாராமல் கிடைத்த குடும்பம்..!

இந்தியா

இந்தியாவில் மூன்று மகன்கள் இருந்தும் வீதியில் ஆதரவற்று இருந்த தாய் ஒருவரை எம்.பி யான சஞ்சய் சிங் தன்னுடைய தாயாக தத்தெடுத்துள்ளார்.

மூன்று மகன்களால் விரட்டப்பட்ட தாயின் வாழ்க்கையில் எதிர்பாராத மகிழ்ச்சியான திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் லீலாவதி தேவி (70). இவர் கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில் அதே ஊரில் உள்ள தனது மூத்த மகனிடம் அடைக்கலம் தேடி சென்றுள்ளார்.

ஆட்டோ ஓட்டுனரான மூத்த மகன் உடல் நலம் சரியில்லாமல் இருந்த நிலையில் அவர் மனைவி குழந்தையுடன் சேர்ந்து அவரை தேவி நன்றாக கவனித்து வந்துள்ளார்

பின்னர் ஆட்டோ ஓட்டுனர் உடல் நலம் தேறிய நிலையில் இனி தனது தாயாரின் தயவு தேவையில்லை என எண்ணி அவரை வீட்டிலிருந்து துரத்தியுள்ளார்.

இதையடுத்து டெல்லியில் உள்ள தனது மற்ற இரண்டு மகன்களை தேடி சென்றிருக்கிறார் தேவி.

ஆனால் தேவிக்கு மன நலம் பாதித்துவிட்டதாக கூறி இரண்டு மகன்களும் அவரை ஏற்று கொள்ள மறுத்துவிட்டனர்.

இதனால் செய்வதறியாது தவித்து வந்த தேவியின் நிலையை அறிந்த அரசியல் பிரபலமும், எம்.பியுமான சஞ்சய் சிங் தேவியை தனது தாயாக எண்ணி தத்தெடுத்து கொண்டுள்ளார்.

இதையடுத்து பல காலமாக கஷ்டப்பட்ட தேவி தற்போது பெரிய வசதியான வீட்டில் வசித்து வருகிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேவி மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அதிலிருந்து மீண்டு வருகிறார்.

சஞ்சய் தனது மனைவி, பெற்றோர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் நிலையில் தேவி அவர்களுடன் வசித்து வருகிறார்.

தற்போது தேவி எங்கள் குடும்பத்தில் ஒருவர் என சஞ்சய் குடும்பத்தார் கூறியுள்ளனர்.