‘தங்கம் விலை குறித்து கவலையில்லை.’ பழைய விலைக்கே வாங்கி குவிக்கும் மக்கள்.!

தங்கம் விலை

கொரோனா பாதிப்பு காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் 50 சதவீதத்திற்கு மேலாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தமிழக மக்களிடம் தங்க சேமிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஏழை, நடுத்தர மக்கள் கூட தங்களுடைய வசதிக்கேற்ப மாதாந்திர நகைச் சீட்டுகளை காட்டி வருகின்றனர்.

இவ்வாறு தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர், நகைச் சீட்டுகளை மாதாமாதம் கட்டி வருகின்றனர். இவர்களால் பழைய விலைக்கே தங்க நகை வாங்க முடியும். இதில் செய்கூலி, சேதாரம் இல்லை. ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படும். மேலும், சீட்டு சேரும்பொழுது சிறப்பு பரிசு உள்ளிட்ட சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் கூட நகை சீட்டு கட்டியவர்கள் விலை உயர்வால் பாதிக்கப்படாமல் தங்கம் வாங்கி குவிக்கின்றனர்.

சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்தாலும் கூட, ரூபாய் மதிப்பு வலுவாக இருந்தால் ஓரளவுக்கு தங்கத்தின் விலை கட்டுக்குள் இருக்கும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகின்றது. இனிவரும் நாட்களிலும் தங்க விலையானது, உயர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் 50 ஆயிரத்தை தாண்டி விற்க வாய்ப்புகள் இருக்கின்றது.

மக்களிடம் முடங்கியுள்ள 25 ஆயிரம் டன் நகை புழக்கத்திற்கு வரும்போதுதான் விலையானது குறையும். தங்கத்தின் இறக்குமதியை குறைத்தால் மட்டுமே இது சாத்தியம். நம் நாட்டின் அந்நியச் செலாவணியை சேமிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.