சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்
இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை பதவியை சி.சிறீதரனுக்கு வழங்கினால் அதனை தான் ஆதரிப்பேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“கட்சிக்கு எதிரான நான் நடந்துகொள்பவன் அல்ல. எனினும், சக வேட்பாளர்கள் எனக்கு எதிராக பரப்புரை செய்தார்கள். நான் ஒருபோதும் அப்படி செய்யவில்லை. எனக்கு ஆதரவாக சிறீதரன் மட்டுமே இருந்தார்.
இதனால் இறுதியில் அவருக்கு எதிராகவும் பரப்புரை செய்தார்கள். இறுதியில் நானும், சிறீதரனுமே வெற்றிபெற்றோம். எமக்கு எதிராக சதி செய்தவர்கள் தோல்வியடைந்தார்கள்.
மக்கள் தீர்ப்பின்படி சிறீதரனும், நானும் வெற்றிபெற்றிருக்காவிட்டால், கட்சி இன்னும் அவமானமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஓர் ஆசனத்தை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.
இதேவேளை, கட்சி மறுசீரமைக்கப்படும்போது அனைவரும் விரும்பி தலைமை பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்வேன் என சிறீதரன் கூறியுள்ளார். தனக்கு அந்த பதவியை தருமாரு அவர் கோரவில்லை.
அவ்வாறு சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன். மேலும் தேசியப்பட்டியல் அறிவிப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இழுபறி ஏதும் இல்லையென” அவர் மேலும் கூறியுள்ளார்.