இலங்கையில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை உயர்த்த ஜனாதிபதி தீர்மானம் !

ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

இலங்கையில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதியால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் போது நாட்டில் சில தேசிய பாடசாலைகள் பெயரில் மட்டுமே தேசிய பாடசாலைகளான உள்ளன.அவற்றில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தநிலையில் அனைத்து வசதிகளைக்கொண்ட தேசிய பாடசாலைகளை அமைக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் பாடசாலை கல்வி முறையை மேம்படுத்த மாவட்ட கல்வி குழுக்களை நியமிக்க ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களும் இதன்போது தீர்மானம் எடுத்துள்ளனர்.

மேலும் மாகாண கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் தர வகுப்புக்காக மாணவர்களை சேர்ப்பது மற்றும் ஆசிரியர் இடமாற்றங்கள் என்பவற்றை தவிர்த்து, பாடசாலை முறையை மேம்படுத்தும் எந்தவொரு செயலிலும் அரசியல்வாதிகள் தலையிட சுதந்திரமாக உள்ளதாக ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நடவடிக்கைகள் பொது நன்மைக்காகவே அன்றி, அரசியல் தலையீடாக கருதப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் அனைத்து அரச பாடசாலைகளிலும் அனுபவம் வாய்ந்த, திறமையான ஆசிரியர்களை செயல் அதிபர்களாக நியமிப்பதற்கான சாத்தியம் குறித்தும் நேற்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.