துபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..!கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்!!

துபாயில் காவல் அதிகாரிகளின் நெகிழ்ச்சி செயல்..

துபாய் நாட்டில் வசித்து வரும் அரபு நாட்டினை சேர்ந்த குழந்தை யாசியா (வயது 3). இந்த குழந்தை சீருடையில் இருக்கும் காவல் அதிகாரிகளை பார்த்தால் மிகுந்த பயம் கொண்டு வந்துள்ளார். மேலும், இவர் காவல் அதிகாரிகளை பார்க்கையில் ஓடி ஒளிந்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர்கள் சிறுமிக்கு பல ஆறுதல் கூறினாலும், சமாதானம் செய்தாலும் பயம் குறையவே இல்லை. இதனையடுத்து எதிர்காலத்தில் தனது மகளுக்கு பயம் இருக்க கூடாது என்று விரும்பிய பெற்றோர், இது தொடர்பில் காவல் துறையினருக்கு தெரியப்படுத்தி, தனது மகளின் பயம் நீங்க உதவி செய்யுமாறு கேட்டுள்ளனர்.

பெற்றோரின் கோரிக்கையை ஏற்ற சுற்றுலா பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு தலைவர் உபைத் பின் அபித் தலைமையிலான காவல் துறையினர் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். சிறுமி விளையாட பொருட்களும் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுமியிடம் அன்பாக பேச துவங்கினர். பின்னர் கண்காணிப்பு காரில் சிறுமியை அமரவைத்த நிலையில், அப்பகுதியில் உள்ள சாலையில் சிறுமியுடன் சுற்றி வளம் வந்துள்ளனர்.

இதனை அடுத்தே சிறுமிக்கு பயம் தெளிந்து, காவல் அதிகாரிகளை பார்த்ததும் புன்னகை ஏற்பட்டது. சிறுமியின் முகத்தில் புன்னகை ஏற்பட்டதும், பெற்றோர்கள் அளப்பரிய மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். சிறுமியின் பெற்றோர்களும் காவல் அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினர். இந்த நெகிழ்ச்சி செயல் உள்ளூர் முழுவதும் பரவி, காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.