44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..!!

தஞ்சாவூர்..

இந்தியாவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் உள்ள இலட்சுமி நகர் 2 ஆம் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 64). இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி பாத்திமா மேரி (வயது 60). இவர்கள் இருவருக்கும் ஜான் எட்வேர்ட் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகிய இரண்டு மகன்களும், கிளைமா என்ற மகளும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது.

லாரன்ஸ் – மேரி தம்பதி மகன்களுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதியன்று பாத்திமாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விடயத்தை அறிந்த லாரன்ஸ் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியுள்ளார்.

தனது மனைவியின் இறப்பை தாங்க முடியாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரின் உடல் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை கண்டு இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளான லாரன்ஸ் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்து பரிதாபமாக அவரும் உயிரை விட்டுள்ளார். 

மேலும், 44 வருடங்கள் இணைபிரியாது வாழ்ந்து வந்த தம்பதி, மறைவிலும் இணை பிரியாது இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.