வவுனியாவில் இரு உயர்தர மாணவிகளை காணவில்லை…!
வவுனியாவில் உள்ள சாஸ்திரி கூழாங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் இரு உயர்தர வகுப்பில் கல்வி கற்று வரும் மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவரும் விடயம்,
வவுனியாவில் சாஸ்திரிகூழாங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் உயர்தர வகுப்பு மாணவி ஒருவரின் வீட்டில் தங்கி நின்று சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரும் கல்வி பயின்று வந்துள்ளார்.
இந்த மாணவியின் தாயார் கடந்த செவ்வாய் கிழமை காலை வேலைக்கு சென்றதனை அடுத்து, பாடசாலையில் இருந்து குறித்த மாணவிகளை பரீட்சைக்கான அனுமதி அட்டையை பெற அனுப்பி வைக்குமாறு தாயாருக்கு தொலைபேசியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த மாணவியிடம் இருந்த தொலைபேசிக்கு தாயார் அழைப்பினை ஏற்படுத்திய போது பதில் எதுவும் கிடைக்கவில்லை. இதன் பின் பக்கத்து வீட்டாருக்கு தெரியப்படுத்தி வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தாயார் அறிவித்துள்ளார்.
அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது குறித்த இரு மாணவிகளும் வீட்டில் இல்லை. இதனையடுத்து தகவல் தாயாருக்கு தெரியப்படுத்தப்பட தாயார் வருகை தந்து பிள்ளைகளை தேடிப் பார்த்துள்ளார்.
எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காத நிலையில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாயால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞன் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு பின்னர் அவரை விடுவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த முறைப்பாட்டு பிரதியை பொலிசார் வழங்கவில்லை எனவும், பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாகவும் பெற்றோர்களும், உறவினர்களும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.