கொழும்பு முழுமையாக முடக்கப்படுமா?

கொழும்பு முழுமையாக முடக்கப்படுமா?

கொழும்பில் முழுமையான முடக்கத்தை செயற்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அதிகாரிகளை மேற்கோளிட்டு இது தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

அவ்வாறு முடக்குவது பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் முழுமையான முடக்கத்தை அமுல்படுத்த தயாராக இல்லை என்றும் மாறாக தெரிவு செய்யப்பட்ட பகுதிகளை மட்டும் தனிமைப்படுத்துவதன் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கொழும்பைச் சுற்றியுள்ள எல்லைகளை தற்காலிகமாக மூட வேண்டும் என்று கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க சமீபத்தில் முன்மொழிந்தார்.

நகரத்தை கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால், வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிரகாரம் நகரத்திற்கு வெளியே வைரஸ் பரவாமல் தடுக்க கொழும்பில் 14 முதல் 21 நாட்கள் முடக்க வேண்டும் என்றும் இந்த காலகட்டத்தில் கொழும்புக்குள் நுழையவோ வெளியேறவோ யாரையும் அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.