இன்று பாடசாலைகளில் இருந்து வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்ட மாணவர்கள்…

ஹட்டன் கல்வி வலயத்தில் கொரோனா அச்சம்….

இலங்கையில் ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நோர்வூட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம், அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு இன்றைய தினம் வருகை தந்த மாணவர்கள் அனைவரும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்திருந்ததாலும், பாடசாலைக்கு வருகை தந்திருந்த மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பாடசாலைகளின் அதிபர்கள் கூறியுள்ளனர்.

மேலும் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

இதனை அடுத்து பாடசாலையும் மூடப்பட்டுள்ளது. இதனால் நோர்வூட் பகுதியில் உள்ள ஏனைய பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 90 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

ஒரு சிலரே பாடசாலைக்கு வந்துள்ள நிலையிலேயே அவர்கள் இவ்வாறு திருப்பி அனுப்பட்டுள்ளனர். அத்துடன் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய வளாகம் மற்றும் நோர்வூட் நகரம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையை நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலு தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..