இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

வீழ்ச்சி

நாட்டில் சுமார் ஒரு மாத காலத்திற்கு பின்னர் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் நேற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் நாட்டில் 364 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 500க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 364 கொவிட் தொற்றாளுடன் நாட்டின் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 631 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 8,873 என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்டில் பாரிய கொவிட் கொத்தணியான திவுலபிட்டி, பேலியகொட மற்றும் சிறைச்சாலைகளில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,736 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களில் 28 ஆயிரத்து 682 பேர் பூரணமாக குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இதேவேளை கொவிட் தொற்றாளர்களில் 181 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது