சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத மற்றும் 18 வயது குறைந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

18 வயது குறைந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத மற்றும் உரிய வயதெல்லையை பூர்த்தி செய்யாதவர்களுக்கு வாகனங்களை செலுத்துவதற்கு அனுமதி வழங்கும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதன்போது குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது 25,000 ரூபா வரை அபராதம் அறவிடுவதற்கும் அனுமதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மோட்டார் வாகனங்கள் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கும், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கும் அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் தங்களது வாகனங்களை செலுத்துலதற்கு அனுமதி வழங்கி வருவதாக தெரிய வந்துள்ளது.

இவர்கள் வினோதமான முறையிலேயே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இது குற்றச் செயற்பாடாகும். அதனால் இவ்வாறு வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கான வாகனஙகளை வழங்கி வரும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.