இலங்கையில் இரண்டாவது கொரோனா அலைக்கு காரணம்! ஆய்வில் வெளியான தகவல்!

கொரோனா அலை

இலங்கையில் கொரோனாவைரசின் இரண்டாவது அலை உக்ரைனிலிருந்து வந்த விமானப்பணியாளர் ஒருவரின் மூலமே பரவியது என தெரியவந்துள்ளது.
பிரதம தொற்றுநோயியல் நிபுணர் சுதத்சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

தொற்றுநோயியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் கடந்த செப்டம்பரில் சீதுவை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த உக்ரைனை சேர்ந்த விமானபணியாளர் மூலமாகவே இலங்கையில் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

இரண்டாவது அலை எவ்வாறு உருவானது என்பதை உறுதி செய்வதற்காக தொற்றுநோயியல் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டது.

சட்டவிரோத மீன்பிடி உரிய சோதனைகளிற்கு உட்படாமல் இலங்கைக்கு திரும்பியவர்கள் போன்றவர்கள் மூலம் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவலாம். எனினும் உக்ரைன் விமானப்பணியாளர்கள் மூலமே பரவியது என நாங்கள் கருதுகின்றோம்.

துருக்கிவிமானம் மூலம் செப்டம்பர் 11ம் திகதி 11 பேர் கொண்ட விமானப்பணியாளர்கள் இலங்கைக்கு வந்தனர் அவர்கள் சீதுவையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்கள் ஹோட்டலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் சிறிய விருந்துபசார நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.

வெளியிலிருந்தும் சிலர் அந்த விருந்துபசசார நிகழ்விற்கு சென்றுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

விமானப்பணியாளர்களில் ஒருவர் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளமை செப்டம்பர் 13 ம் திகதி தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் ஐவரும் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.