பிக்பாஸ் ‘கட்டிப்பிடி’ குறித்து இசையமைப்பாளரின் அதிர்ச்சி விளக்கம்.!

பிக்பாஸ்

 

பிக் பாஸ்-1 துவங்கிய நாள் முதலே வீட்டில் ஆண், பெண் போட்டியாளர்கள் கட்டிபிடிப்பது நிகழ்ந்து வருகிறது. முதல் சீசனில் சினேகன் பெண் போட்டியாளர்களை கண்டமேனிக்கு கட்டிப்பிடித்து நெட்டிசன்களிடம் வசை வாங்கி இருந்தார். அதுபோல தற்போது ஒளிபரப்பாகும் நான்காவது சீசனில் ரியோ அதே வேலையை செய்வதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில், பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த கட்டிப்பிடி கலாச்சாரம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், “இப்போ நான் பேசப்போறது ஒரு delicate-ஆன விஷயம். இருந்தாலும் பலர் மனசில் இது இருக்குறனால, இதைப்பற்றி பலர் கிண்டலாகவும் பேசுறனால நான் அதை எழுதுறேன்.

போட்டியாளர்கள் தங்கள் அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒருவரையொருவர் அணைத்துக் கொள்வது பற்றி. ஆண்-பெண் அணைப்பைப் பற்றிதான்!

நான் வளர்ந்ததும் இந்தக் கலாச்சாரத்தில்தான்! அதீத அன்பு, பாசம், மகிழ்ச்சி, பெருமிதம், உற்சாகம், நீண்ட நாள் பிரிவு என பல காரணங்களுக்கு நம்மையறியாமல் நாம் நம்மிடம் நெருங்கிப் பழகுபவர்களிடம் வெளிப்படுத்தும் ஒரு உடல்மொழி. இதில் ஒன்றும் தவறில்லை.

என் அம்மா எங்கள் சின்ன வயதில் எங்களிடம் சொல்லியது நினைவிருக்கிறது. அக்காவானாலும், ஒரு வயதுக்குப் பிறகு தொட்டுப் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பார். அது பழையகாலத்துப் பண்பாடு என்று புரிந்துகொண்டாலும், அதில் ஒரு வரைமுறை இருந்தது என்பதை இப்போது விளங்கிக்கொள்கிறேன்.

ஒரு ஆண் பெண்ணை அணைக்கும்போது ஒரு வரையறையுடன் அணைப்பது நாகரிகம். ஒரு வளர்ந்த ஆண், ஒரு பெண்ணை அணைக்கும்போது ஒரு லாவகம் வேண்டும். நேராக மார்போடு மார்பாக இறுக்கி அணைப்பது முறையல்ல. காதலி, மனைவியைத் தவிர.. அல்லது அதை அவளும் விரும்புகிறாள் எனும் பட்சத்தைத் தவிர.

BB வீட்டில் இது கொஞ்சம் ஓவராகத்தான் நடந்தது/நடக்கிறது. சிலருக்குக் கொஞ்சம்கூட இங்கிதம் இல்லை. நாம் பொதுவாக நல்லவர்கள்தான் என்றாலும் எல்லாருக்குள்ளும் வ.க்கிரமும் ஒளிந்திருக்கும். கூடலாம் குறையலாம், ஆனால் இருக்கும். இதைப்போன்ற அணைப்புகளில் ஒரு தி.ரு.ட்டு வ.க்கிர சு.கம், ஆழ்மனதின் ரசிப்பும் இருக்க வாய்ப்புண்டு.

இதைப்போன்ற சூழ்நிலைகளில் பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். பெண்களிடம் கேட்டுப்பாருங்கள். தவறான உள்நோக்கத்துடன் அணைப்பவர்களை அவர்கள் உடனே கண்டுகொள்வார்கள். அந்த அணைப்பில் அது தெரிந்துவிடும். அதை விரும்புவதோ, தவிர்ப்பதோ ஒவ்வொருவரின் இஷ்டம்.

இப்போது இந்த நிகழ்ச்சியின் எல்லாப் பழைய எபிசோட்களையும் போட்டு ஒவ்வொருவரின் நடத்தையையும் பாருங்கள். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதில் ஆரி எப்போதோ ஒருமுறை சிலரை அணைத்த விதத்தையும் பாருங்கள்!” என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த முகநூல் பதிவு விவாதப் பொருளாக மாறியுள்ளது.