பெற்றோர்களே கவனம்: இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்டு, போராடி மறுபிறப்பு எடுத்த குழந்தை..

தமிழகம்

 

கள்ளக்குறிச்சியை சார்ந்த தம்பதி குமரேசன் – கனிமொழி. கனிமொழி கர்ப்பிணியாக இருந்து வரும் நிலையில், மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்த மாத்திரை வண்ணத்துடன் மிட்டாய் போல இருந்த நிலையில், இவருக்கு இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.

அந்த குழந்தை தாயின் கவனக்குறைவு காரணமாக, இரும்பு சத்து மாத்திரைகளை உட்கொண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக இரும்புசத்து மாத்திரைகளை சாப்பிட்ட குழந்தை, அங்குள்ள தனியார் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளது.

இரத்தக்கசிவு நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், இறுதியாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் விளைவாக, தற்போது குழந்தை உயிர் பிழைத்தது.

இது தொடர்பாக மருத்துவர்கள் தெரிவிக்கையில், இரும்புச்சத்து மாத்திரை உடலுக்கு நல்லது என்றாலும், வயது மற்றும் உடலுக்கு தேவையான அளவு மட்டுமே அதனை சாப்பிட வேண்டும்.

அதிகளவு சாப்பிட்டால் அது நஞ்சாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் அல்லது அவர்களுக்கு அருகே எந்த விதமான மாத்திரையையும் பெற்றோர்கள் அலட்சியமாக வைக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.